மதுரை மாநகராட்சி குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

மதுரை, ஜூலை 18: ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்கள், தனியார் கட்டிட பில்டர்கள், பெரு வணிகர்கள், பள்ளி கல்லூரி, திருமண மண்டபம், வணிக வளாகம் மற்றும் மருத்துவமனை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை வகித்து பேசுகையில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழமையான குளங்கள் ஒவ்வொன்றிற்கும் தொடர் இணைப்பு உள்ளது. அந்த இணைப்புகளில் உள்ள சிறுசிறு தடைகளை சரிசெய்தாலே மழைநீரை நாம் குளங்களில் முழுமையாக சேமிக்க முடியும். குறிப்பாக தல்லாகுளம் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் மழைநீர் வரும் வாய்க்காலில் சிறு அடைப்பு மாநகராட்சியின் சார்பில் சரிசெய்யப்பட்டதால் சென்றமுறை மழைநீர் முழுமையாக குளத்தில் சேகரிக்க முடிந்தது. அதேபோல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள் கணக்கிடப்பட்டு ஒவ்வொன்றும் படிப்படியாக மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட சிறுசிறு குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காலியிடங்களில் மரம் நடுவதை விட அதை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விவரங்களுக்கு மாநகராட்சி அழைப்பு மையம் 0452 - 2525252 மற்றும் வாட்ஸ் அப் 7449104104 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதில் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சந்திரன், மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், அறக்கட்டளை திட்ட இயக்குநர் சரவணன், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகர், சேகர், முருகேசபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: