10 ஆண்டுக்கு பின் புதூர் தொழிற்பேட்டைக்கு புதிய சாலை

மதுரை, ஜூலை 18: மதுரை புதூர் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த 10ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை புதூர் தொழிற்பேட்டை சாலைகள் மிக மோசமாக இருந்தன. மேலும் தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் புதூர் பகுதியிலிருந்து மாட்டுத்தாவணி காய்கறி, பூ மார்க்கெட் பகுதிக்கும், பஸ்ஸ்டாண்டிற்கும் வருபவர்கள் மற்றும் இங்குள்ள குடியிருப்புவாசிகள், பணிக்கு வந்து செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சாலை அவலங்கள் குறித்த படங்கள் தினகரன் நாளிதழில் வெளிவந்தன.

இதன்எதிரொலியாக தற்போது தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு கழகத்தின் (டான்சிட்கோ) சார்பில் ரூ.5 கோடியே 2 லட்சம் செலவில் புதூர் தொழிற்பேட்டை பகுதியில் மத்திய அரசின் எம்எஸ்இ திட்டத்தின் கீழ் சாலைகள், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகள் வசதிகள் அமைப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. 60 சதவீதம் மத்திய அரசு நிதி, 30 சதவீதம் மாநில அரசு நிதி, 10 சதவீதம் குடியிருப்போர் மற்றும் தொழிற்சங்கத்தினரின் நிதி என 100 சதவீத நிதியில், 2.8 கிமீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் ரோடு அமைப்பது முதல் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. சிட்கோ கிளை மேலாளர் சசிகலா உள்ளிட்டோர் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகிறது.குடியிருப்போர் கூறுகையில், ‘‘புதூர் தொழிற்பேட்டை பகுதி சிட்கோ, மாநகராட்சி என இருதரப்பினர் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதிகளின்றி தவித்து வந்தோம். தற்போதைய பணி மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே பணிகளை தரத்துடன், விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: