கோவில்பட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்

கோவில்பட்டி, ஜூலை 18: கோவில்பட்டியில்  நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம்  மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி  வழங்கினார்.      கோவில்பட்டி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்குத் தலைமை வகித்த கலெக்டர்  சந்தீப் நந்தூரி,  கோவில்பட்டி,  ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களை சேர்ந்த மக்கள் அளித்த கோரிக்கைகள் தொடர்பான 309 மனுக்களை பெற்றுக்கொண்டார். இவற்றில் தகுதியான மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 143 பேருக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை  மரண நிவாரண தொகை, விபத்து நிவாரண தொகை, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா என ரூ.30  லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  கூட்டத்தில் டிஆர்ஓ வீரப்பன், பிஆர்ஓ சீனிவாசன்,  ஆர்.டி.ஓ.விஜயா, கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்  தாசில்தார்கள் பரமசிவன், லிங்கராஜ், ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் அச்சையா  மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதையொட்டி கோவில்பட்டி டி.எஸ்.பி.  ஜெபராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.

    காங். நிர்வாகியால் பரபரப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரும், வக்கீலுமான அய்யலுச்சாமி என்பவர் கருப்பு சட்டை அணிந்தபடியும், கழுத்தில்  ராஜிவ் காந்தி படத்தை கட்டிக்கொண்டும் கலெக்டர் தலைமையில் நடந்த குறை தீர் கூட்டத்தில்  மனு அளிக்க  செல்வதாகக் கூறி வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். மனு அளிக்க கருப்பு சட்டை  அணிந்து கொண்டும், படத்தை கட்டிக் கொண்டும் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து அய்யலுச்சாமி, கருப்பு சட்டையையும், ராஜிவ் காந்தி படத்தையும் கழற்றி வைத்து விட்டு, கலெக்டர்  சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை  வழங்கக்கோரி  பல்வேறு அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்துள்ளேன். தற்போது தமிழக அரசு ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை  எடுத்து கவர்னருக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ராஜிவ் காந்தி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

Related Stories: