×

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மீண்டும் ஆய்வுக்குழு மக்களை திசை திருப்பும் செயல்

திருவாரூர், ஜூலை 18: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக மீண்டும் ஒரு ஆய்வு குழு என்று சட்டதுறை அமைச்சர் தெரிவித்திருப்பது மக்களை திசைதிருப்பும் செயல் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக அழிந்து பாலைவனமாக மாறுவதுடன் குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை ஏற்படும். எனவே இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தற்போது பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இந்த திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதுகுறித்து ஒரு ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆய்வு குழு என்பது மக்களை திசைதிருப்பும் செயல் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில துணை செயலாளர் மாசிலாமணி கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூலம் அமைக்கப்பட்ட ஆய்வுகுழு முடிவின்படி இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்று சட்டசபையில் அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ள நிலையில் இருப்பினும் மீண்டும் ஒரு ஆய்வு குழு என்று தெரிவித்திருப்பது மக்களை திசைதிருப்பும் செயலாகும். இதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்காக போராட விரும்பி சிறை செல்பவர்களை பற்றி கவலையில்லை என்றும் அமைச்சர் கூறியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும். எனவே இதுபோன்று பேச்சுக்களை அமைச்சர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். மக்களையும், விவசாயிகளையும் திசைதிருப்பும் செயலை விட்டுவிட்டு இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிப்பதற்கான முயற்சியினை எடுக்கவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...