×

தூய்மைபாரத திட்டத்தின்கீழ் கழிவறை கட்டும் திட்டத்தில் மோசடி நபர்கள் மீது விசாரணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருவாரூர், ஜூலை 18: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிவறை கட்டியதாக நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கழிவறை கட்டுவதற்காக பயனாளி ஒருவருக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இதுபோன்று கழிவறைகள் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிமிழி ஊராட்சி கீழநானசேரி கிராமத்தில் இந்த திட்டத்தின் கீழ் கழிவறை கட்டுவதற்காக 40 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதில் இதுவரையில் 29 பேர்களுக்கு மட்டுமே இந்த கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 பேர்களுக்கு கழிவறை கட்டுவதற்கான பணிகள் கடந்த 8 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கழிவறை இல்லாமல் திண்டாடும் நிலை இருந்து வருகிறது. மேலும் இது போன்று கழிவறை கட்டிகொடுப்பதற்காக அலுவலர்கள் உதவியுடன் தனிநபர் சிலர் ஈடுபட்டு பயனாளிகளிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கையூட்டல் பெறுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய செயலாளர் சேகர் கூறுகையில், சிமிழி ஊராட்சியில் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் இதுபோன்று கழிவறை கட்டுவதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒரு சிலருக்கு மட்டும் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு கட்டப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த கழிவறை கட்டுவதற்காக அலுவலர்கள் உதவியுடன் தனிநபர் சிலரும் சேர்ந்து கையூட்டு (லஞ்சம்) பெறும் நிலையும் இருந்து வருகிறது. இது மட்டுமன்றி இதே போன்று அன்னவாசல் ஊராட்சி மழவச்சேரி கிராமத்திலும் கழிவறை கட்டுவதற்கான பயனாளிகளிடம் தொகை வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு இதுவரையில் கழிவறைகள் கட்டி கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுபோன்ற அலுவலர்கள் உதவியுடன் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் இதுபோன்ற நிலை தொடருமானால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...