×

விரைந்து சரி செய்ய வலியுறுத்தல் திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்களின் வழியாக புறவழிச்சாலை அமைக்கக்கூடாது

தஞ்சை, ஜூலை 18: திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி நகரில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்கியுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் வழியாக சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார் தலைமையில் ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்த பத்மநாதன், கிருபானந்தம், சரவணன், மோகன், கலியமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலைகாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலங்களில் பல தலைமுறையாக முப்போகம் சாகுபடி செய்து வருகிறோம். கடும் வறட்சியிலும் இங்கு 90 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைக்கிறது. காவிரி, குடமுருட்டி மூலம் நேரடி நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. குடமுருட்டி தலைமதகிலிருந்து தனி வாய்க்கால் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.70 லட்சத்தில் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் இல்லாத காலங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி நடைபெறும். நெல், கரும்பு, வாழை இவற்றுடன் கோடை சாகுபடியில் உளுந்து, பயிறு ஆகியவை இந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

திருக்காட்டுப்பள்ளி சுற்றுச்சாலை அமைக்க மனுதாரர் நிலம் அருகிலேயே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலம் உள்ளது. கரப்பேட்டையில் காவிரியில் கோணங்கடுங்கலாறு இந்த சாகுபடி நிலத்துக்கு அருகில் தான் செல்கிறது. இதன் ஆற்றங்கரையே இப்போதும் போக்குவரத்து சாலையாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இச்சாலையையே சுற்றுச்சாலைக்காக விரிவுப்படுத்தலாம். இதனால் தனியார் நிலம் கையகப்படுத்துதலும், அதற்கு இழப்பீடு தருவதுமான செலவும் அரசுக்கு மிச்சமாகிறது. மேலும் கோணங்கடுங்கலாறு கரையில் போகும் சாலையை செப்பனிட்டால் வேளாண் இடுபொருட்களையும், உற்பத்தி பொருள்களையும் கொண்டு செல்ல போக்குவரத்துக்கு விவசாயிகளுக்கு நன்மை தரும். இதன்மூலம் ஒன்பத்துவேலி, மைக்கேல்பட்டி, கண்டமங்கலம் ஆகிய கிராமங்களின் சாகுபடிக்கான தேவைகளும் வசதி பெறும். இது காவிரி விவசாயத்துக்கு பெரிதும் பயன்படும். இந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. எந்த நிலத்தில் வேண்டுமானாலும் சாலை அமைக்க முடியும். ஆனால் நஞ்சை நிலத்தில் மட்டும் தான் விவசாயம் செய்ய முடியும். எனவே இப்பிரச்னையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் முடிவு சட்டவிரோதமானது. இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...