×

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் அரசலாற்று பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் மக்கள், மாணவர்கள் அச்சம்

கும்பகோணம், ஜூலை 18: கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரஹாரம் அரசலாற்று பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள், மாணவர்கள் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே மின்விளக்குகள் விரைந்து சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரஹாரம் அரசலாறு பாலத்தின் வழியாக கொற்கை, பட்டீஸ்வரம், ஆவூர், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்கு செல்லலாம். இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில் அரசலாற்று பாலத்தில் கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரிதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து விடுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதேபோல் பாலத்தின் சுவரில் குடிமகன்கள் அமர்ந்திருப்பதால் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பாலத்தின் அருகில் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள், இந்த அரசலாற்று பாலத்தின் வழியாக சென்று வருவார்கள். கடந்த சில நாட்களாக பாலத்தின் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாக இருப்பதால் மாலை நேரங்களில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர்.இதேபோல் பாலத்தின் கீழே இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் அதை தின்பதற்காக வரும் நாய்கள், சாலையில் செல்லும் பொதுமக்களை கடிக்க வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அரசலாற்று பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு கட்டைகள் சிதிலமடைந்து இரும்புகள் வெளியில் வகையில் எழும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மேலும் நள்ளிரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே சாலையில் போட்டு உடைத்தும், நடந்து செல்பவர்களிடமும், வாகன ஓட்டிகளிடம் நிறுத்தி தகராறு செய்வதால் இரவு நேரங்களில் பாலத்தின் வழியாக சென்று வர கிராமத்துக்கு செல்பவர்கள், சாக்கோட்டை் வழியாக சுற்றி செல்கிறார்கள்.எனவே அண்ணலக்ரஹாரம் அரசலாற்று பாலத்தில் போதுமான மின்விளக்குகள் அமைத்து கல்லூரி மாணவிகள், பாதசாரி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செ்யய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு