×

மணமேல்குடியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இடிந்து விழும் நிலையில் புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

மணமேல்குடி, ஜூலை 18: மணமேல்குடியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே இடியும் நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றி அருகில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், வழியில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் எந்த ஆபத்தும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின்போது, கடற்கரையோர மீனவர்கள் மற்றும் பொதுமக்களை பேரிடர் பாதிப்பில் இருந்து பாதுகாக்க புயல் பாதுகாப்பு மையங்கள் கடற்கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமாவடி முதல் மீமிசல் வரை பல பகுதிகளில் புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இவை அனைத்தும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக மணமேல்குடியில் கட்டப்பட்ட புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் தற்போது சிதிலமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.
சில பகுதிகளில் இடிந்த நிலையிலும் காணப்படுகிறது. மேலும் கதவு, ஜன்னல்கள் உடைந்து, கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பலத்த காற்று அடித்தால் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் இதன் வழியாக நடந்து செல்லும் அனைத்து மக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். முக்கியமாக இந்த கட்டிடத்தின் எதிரிலேயே மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.எதுவும் அறியாத, ஆபத்தை உணராத சிறிய குழந்தைகள் இக் கட்டிடத்தின் அருகிலேயே நடந்து செல்கின்றனர்.

மேலும் இக்கட்டிடத்தின் அருகிலேயே வட்டார வள கல்வி மையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை, வழிபாட்டுத்தலம் ஆகியவை உள்ளது. மேலும் வடக்கம்மாபட்டினம், கீழக்குடியிருப்பு, அக்ரஹாரம், வடக்கூர், செங்குந்தர்புரம், நல்லூர், பத்தக்காடு போன்ற பகுதிகளிலிருந்து இந்த அரசு மருத்துவமனைக்கோ அல்லது அரசு அலுவலகங்களுக்கோ செல்வதாக இருந்தால் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து மக்களும் பயத்துடனே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பழைய புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஏனென்றால் இதற்கு பதிலாக மணமேல்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் பல்நோக்கு பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் புதிய புயல் பாதுகாப்பு கட்டிடம் செயல்படுகிறது.எனவே இந்த பழைய புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தை இடித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே, இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. புயலால் பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, இந்த கட்டடத்தினால்தான் தற்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...