×

பொன்னமராவதி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரம்

பொன்னமராவதி, ஜூலை 18:பொன்னமராவதி பகுதியில் ஒருசில பகுதிகளில் பெய்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியினை தொடங்கியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பொன்னமராவதி பகுதியில் போதிய மழை பெய்யவில்லை.
இதனால் இப்பகுதியில் எந்த விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இப்பகுதியில் ஒருசில பகுதிகளில் பரவலாக மழைபெய்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக மழைபெய்தது. இந்த மழையினைப் பயன்படுத்தி நகரப்பட்டி, கல்லம்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, சங்கம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், புதுப்பட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியினை தொடங்கியுள்ளது.உழவு செய்ய டிராக்டர் வண்டியினை வைத்து உழவு செய்கின்றனர்.ஆனால் நிலக்கடலை பருப்பு போட மாடுகள் மூலம் தான் இப்பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கு உழவு மாட்டிற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகள் இருக்கும் ஆனால் இன்று ஊருக்கு ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி உழவு மாடுகள் மட்டுமே உள்ளது.

 உழவு மாடுகள் வைத்து தீனிபோட முடியவில்லை. பல வருடங்களாக மழை இல்லாமல் இருப்பதால் மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்கவில்லை. வயல்வெளிகளில் புல் இல்லை. இதனால் ஒரு லட்சம் ரூபாயிக்கு மேல் செலவளித்து மாடுகள் வாங்கினாலும் அதற்கு தீனி போடமுடியவில்லை.
இதனால் மாடுகள் வளர்க்க முடியவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உழவு மாடுகள் கிடைக்காத நிலையில் நிலக்கடலை சாகுபடியினை குறைத்து உழுந்து, தட்டப்பயிர், சோளம், துவரை உள்ளிட்டவைகள் போடவேண்டிய நிலையுள்ளது. உழவு மாடுகள் கிடைக்காத இந்த சூழலில் நவீன இயந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏதுவாக வேளாண்துறை, கூட்டுறவுத் துறைகள் மூலம் குறைந்த வாடகையில் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏதுவாக நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா