நமையூர் ஏரியின் வரத்து வாய்க்காலை தூர்வாரிய இளைஞர்கள் பாராட்டு குவிகிறது

பெரம்பலூர், ஜூலை 18: நமையூர் ஏரிக்கான வரத்து வாய்க்காலை சீரமைக்கும் பணியை இளைஞர்கள் செய்துள்ளது. இதற்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.தமிழக அளவில் பருவமழை பொய்த்து போய்விட்ட நிலையில் ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து தற்போது விவசாயத்துக்கு மட்டுமன்றி உயிர்வாழ தேவையான குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் இனிவரும் மழைநீரை கொஞ்சம்கூட வீணடிக்காமல் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இருந்தும் தமிழக அரசு தாமதமாக, அதிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 73 ஏரிகளில் 14 ஏரிகளை மட்டும் குடிமராமத்து பணிகளின் மூலம் சீரமைக்க, வரத்து வாய்க்கால்களை தூர்வார, மதகு, கழிங்குகளை சரி செய்ய நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடுமையான வறட்சியை உணர்ந்த இளைஞர்கள் பல கிராமங்களில் தங்களது ஏரி, குளம், கன்மாய் போன்ற நீர்நிலைகளை தாங்களே சீரமைத்து வருவது அதிகரித்துள்ளது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தில் அவ்வூர் இளைஞர்கள், பொதுமக்கள் ஏரி, குளம் என 2 நீர்நிலைகளை சீரமைத்துள்ளனர். அதேபோல் ஒதியம் கிராமத்தில் ஏரியையும், பேரளி கிராமத்தில் ஏரி, குளம், கிணறு ஆகியவற்றையும் இளைஞர்கள், பொதுமக்கள் சீரமைத்துள்ளனர். மேலும் பெரம்பலூரில் புகழ்பெற்ற வெள்ளந்தாங்கியம்மன் கோயில் ஏரியை மாவட்ட சமூகநல கூட்டமைப்பினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். இச்செயல்களுக்கு சமூகவளை தளங்களில் பாராட்டு கிடைக்கிறது.

இந்நிலையில் குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தில் வரத்து வாய்க்காலை இளைஞர்கள் தூர்வாரி சீரமைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. நமையூர் கிராமத்தில் உள்ள ஏரி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாசன ஏரியாக இருந்ததோடு அப்பகுதியில் உள்ள கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கும் நீராதாரமாகவும், ஊரின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாகவும் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் போனது, வரத்துவாய்க்கால் சீரமைக்கப்படாதது உள்ளிட்ட பலகாரணங்களால் ஏரியில் நீர் நிரம்பவில்லை. இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வரத்துவாய்க்காலை சீரமைக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுத்தப்படுத்தி வருகின்றனர். இவர்களது செயல்களுக்கு சமூக வளைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

Tags :
× RELATED பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்