×

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும்

அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி னிவாசன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் குற்றங்கள் தடுப்பு, சாலை பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி எடுத்துக்கூறி பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடையே ஜாதிவெறி ஏற்படுத்தக்கூடாது, மாற்றாக தேசப்பற்று ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பொது அறிவு, நடப்பு நிகழ்வு குறித்து எடுத்துக்கூற வேண்டும். சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அதன் பின்விளைவுகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.பொய்யான தகவல்களை செல்போன் மூலம் பரப்பினால் தண்டனை வழங்கப்படும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தவறுகள் நடக்கும் பட்சத்தில் அவசர உதவி எண் 100 அழைக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் அதை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக ஸ்பெஷல் ரைடு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் சாலை பாதுகாப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அரியலூர் மாவட்ட மாணவர்கள் கல்வியில் முதல் ஐந்து இடங்களில் வருமாறு செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, ஜெயங்கொண்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குமார், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத...