×

காமராஜர் சிலைக்கு மரியாதை

வி.கே.புரம், ஜூலை 18:வி.கே.புரத்தில் நகர ஜனதா தளம் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். அம்பை வட்டார தலைவர் சுவிசேஷரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துநாராயணன், பொருளாளர் முஹம்மதுஅப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை வட்டார முன்னாள் தலைவர் ஜெபக்குருமணி வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ஜேபஸ்பொன்னையா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் நம்மஊரு நம்மஆறு கூட்டமைப்பு தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகர தலைவர் நல்லையா, முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் அருணாசலம் நன்றி கூறினார். இதேபோல் வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. சமூக ஆர்வலர் டாக்டர் திருமாறன் தலைமை வகித்தார். ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ராம்மோகன், பசுமை அறக்கட்டளை நிறுவனர் சுப்புராஜ், தலைமையாசிரியர் அருள்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி வளர்ச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பாடல், ஓவியம், கோலப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சியும் நடந்தது. பசுமை அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் ரோஸ்லின் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் பவுலின்அமுதா செய்திருந்தார்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு