விரட்டி, விரட்டி கடிக்கும் வெறிநாய்களால் பாதிப்பு கடையம் யூனியனை பொட்டல்புதூர் மக்கள் முற்றுகை

கடையம், ஜூலை 18:  பொட்டல்புதூரில் மக்களை கடித்து அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க வலியுறுத்தி தமுமுகவினர், கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில், கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.  சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெறிநாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன. இதுவரை 15 பேர், நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரவே குழந்தைகள் பயப்படுகின்றனர். பொட்டல்புதூரில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க வலியுறுத்தி தமமுகவினர், ஊராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் மீரான்முகைதீன் தலைமை வகித்தார்.

Advertising
Advertising

ஒன்றிய தலைவர் மதார் கனி லெப்பை, ஒன்றிய செயலாளர் கோதர்மைதீன், மனிதஉரிமைகள் அணி மாவட்ட செயலாளர் ஆதம்பின் ஹனிபா, மனிதஉரிமைகள் அணி மாவட்ட பொருளாளர் பொட்டல் சலீம், மனிதஉரிமைகள் அணி மாவட்ட துணை செயலாளர்  அன்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதலியார்பட்டி ஹாலித், அசார், பொட்டல்புதூர் தங்கள், கானா அலி, சாகுல், சாதிக், முகம்மது அலி, மைதீன், அம்மா சேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்த கடையம் எஸ்ஐ ஜெயராஜ், சிறப்பு எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசினார். இதில் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இன்று (18ம் தேதி) மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்து தமுமுகவினர் கலைந்து சென்றனர்.கடும் வாக்குவாதம்

பேச்சுவார்த்தையின்போது பிடிஓ முருகையா, நாய்களை பிடிப்பதற்கு பன்றி பிடிக்கும் நபர்கள் இருந்தால் தெரிவியுங்கள். நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம், என்றார். மேலும் நாய்கள் குறித்த எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்வதற்கு உங்களிடம் நல்ல குரல் வளம் மிக்க நபர் இருந்தால் வாருங்கள் என்றும் கூறினார். இதற்கு நாங்களே எல்லா வேலையும் செய்தால், நீங்கள் எதற்கு அதிகாரி என்று இருக்கிறீர்கள் எனக் கேட்டு தமுமுகவினர் கோஷமிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: