சிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி துவங்கியது

சிவகிரி, ஜூலை 18:  சிவகிரியில் அபாய நிலையில் இருந்த திறந்தவெளி கிணறுக்கு கம்பிவலை மூடி அமைக்கும் பணி, தினகரன் செய்தி எதிரொலியாக தொடங்கியுள்ளது. சிவகிரி பேரூராட்சி 8வது வார்டு கருங்குளம் வடக்குத்தெரு மையப்பகுதியில் பழமையான கிணறு உள்ளது. 50 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இக்கிணறு இருந்து வந்தது. சுமார் 25 அடி ஆழம், 5 அடி உயர சுற்றுச்சுவருடன் வட்டவடிவிலான இக்கிணறு, நாளடைவில் தெருவின் தரைத்தளம் உயர்ந்த காரணத்தால் சுற்றுச்சுவரின் உயரம் 1.5 அடி உயரமாக குறைந்தது.
மேலும் தண்ணீரும் வற்றி குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பின்றி திறந்தவெளியில் காணப்பட்ட இக்கிணற்றில் இதுவரை 3 குழந்தைகள் தவறி விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள இக்கிணற்றுக்கு கம்பிவலை மூடி அமைத்து மழைநீர் சேமிப்பு தொட்டியாக பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும். இதுகுறித்து கடந்த 13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில் கருங்குளம் வடக்குத்தெருவில் உள்ள திறந்தவெளி கிணற்றை பேரூராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நவராஜ், பேரூராட்சி பொறியாளர் சமுத்திரம், சுகாதார மேற்பார்வையாளர் குமார் மற்றம் ஊழியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் குப்பை கூழமாக காணப்பட்ட கிணறு சுத்தப்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படும் வகையில், கிணற்றில் மணல், செங்கல் மற்றும் கருங்கற்கள் கொட்டப்பட்டன. தெருவில் மழை நேரத்தில் கரைபுரளும் தண்ணீர் கிணற்றுக்குள் விழும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து கிணற்றின் மேல் பகுதியில் கம்பிவலை மூடி அமைப்பதற்காக அளவீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு துரிதமாக நடந்து வருகிறது.கிணற்றை சீரமைத்து மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி கம்பிவலை மூடி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கும், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

Tags :
× RELATED மாடு முட்டியதில் பலத்த காயம்...