10 நாட்களாகியும் குடிநீர் விநியோகம் இல்லை தெற்குகடையத்தில் பெண்கள் முற்றுகை

கடையம், ஜூலை 18:   கடையம் யூனியனுக்குட்பட்டது தெற்குகடையம் ஊராட்சி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த ராமநதி ஆறு இரண்டாற்று முக்கு பகுதி தற்போது வறண்டு கிடக்கிறது. இதனால் அருகிலுள்ள தனியார் கிணற்றில் இருந்து குடிநீர்  வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கிணறும் வற்றியதால், தெற்குகடையம் பகுதியில் குடிநீர் விநியோகித்து 10 நாட்களுக்கு மேலாகிறது. இதையடுத்து சீராக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி நேற்று தெற்குகடையம் ஊராட்சி அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலர் பழனி, ஆறுகள் வறண்டு விட்டது. இருப்பினும் குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். இதையேற்று பெண்கள், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுமா?ராமநதி ஆற்றை ஒட்டியுள்ள தெற்குகடையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணமென கூறப்படுகிறது. இங்குள்ள உள்ளாற்று பகுதியில் உறைகிணற்றை போர்க்கால அடிப்படையில் அமைத்தால் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் தெரிவித்துள்ளனர். அதுவரை தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: