வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு நகரம் கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சிவகிரி, ஜூலை 18:  வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரம் பெரியகுளம் கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில் 185 குளங்களில் பணிகள் நடந்து வருகிறது. தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் இப்பணிகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயை பார்வையிட்ட அவர், கண்மாயில் காணப்படும் சீமைக்கருவேல கருவேலமரங்களை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கண்மாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தவும், மடைகள் மற்றும் மதகுகளை செப்பனிடவும் ரூ.17 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் செய்ய ஆணை பிறப்பித்தார். அப்போது உடனிருந்த நகரம் பெரியகுளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் காந்தி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேதுராமன் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து சிந்தாமனி பெரியகுளம், நாரணபுரம், இளவன்குளம் ஆகிய குளங்களை பார்வையிட்ட கலெக்டர் ஷில்பா, ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மழைநீர் சேமிப்பின் அவசியம், நீர்மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து பேசினார்.  கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் அறிவியல் ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளின் கும்மிப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஷில்பா, மரக்கன்றுகளும் நட்டார். நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாதேவி, ஆசிரிய, ஆசிரியைகள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் செண்பகக்கனி, செல்வம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ராஜாராம், ஜெயமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியை உதவி தலைமையாசிரியை அலாய்சியஸ் ஜெயபாரதி, பள்ளி என்சிசி ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: