×

காரைக்கால் அம்மையார் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுதுபடையல் நிகழ்ச்சி பிரமாண்ட இலையில் படைப்பு

காரைக்கால், ஜூலை 18: வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பிச்சாண்டவருக்கு, அம்மையார் மாங்கனி, தயிர் சாதத்துடன் அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைபு கூறும் வகையில், ஆண்டுதோறும், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு மாங்கனித் திருவிழா கடந்த 13ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி 10 மணிக்கு புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (16ம் தேதி) காலை 6 மணிக்கு கயிலாசநாதர் கோயிலிலிருந்து, பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல், மாடிகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அன்று இரவு காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு செல்லும்  பிச்சாண்டவரை, காரைக்கால் அம்மையர் எதிர்கொண்டு அழைத்துச்சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரமாண்ட இலையில், தயிர் சாதம், மாம்பழம், மற்றும் பதார்த்தங்கள் வைத்து படையல் நடைபெற்றது.விழாவில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று (17ம்தேதி) அதிகாலை அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதுசமயம் கோயில் மற்றும் கோயில் உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதிவடிவமாக இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்வு நடைபெறும். விழா ஏற்பாடுகளை, அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags :
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3...