×

ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவக்கம்

நாகை, ஜூலை 18: நாகை மாவட்டத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.தேங்காய்களின் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்புகூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலையும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது. விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்து தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், குத்தாலம், மயிலாடுதுறை,நாகை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், திருப்பூண்டி ஆகிய எட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பந்து கொப்பரை, அரவை கொப்பரை என இரு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.99.20 மற்றும் அரவை கொப்பரைக்கு ரூ.95.21 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி கடந்த 15ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 வரை நடைபெறும். விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.பெயர்களை பதிவு செய்யும்போது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார்அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாஃபெட் நிறுவனம் பாரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் இத்தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலையினை பெற்றிடலாம்.கொப்பரை தேங்காய்க்கான தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று தினங்களுக்கு வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்