×

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றவேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், ஜூலை 18: விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை கடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக, அதிகளவு கடைகள்தான் உருவாகி வருகிறது.இந்நிலையில், விவசாய நிலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் விவசாய நிலங்களில்தான் செயல்பட்டு வருகிறது. இதனால், சரக்குகளை வாங்க வரும் குடிமகன்கள், கடைகளின் வெளியே நின்று குடித்துவிட்டு, வாட்டர் பாட்டில், கப் போன்றவற்றை அப்படியே போட்டு விட்டு செல்வதால் விவசாய நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், குடிமகன்களால் போடப்படும் பொருட்களால் பாதிப்புகள் அதிகளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .எனவே, அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு, பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...