×

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா முன்னேற்பாடு தீவிரம்

திருத்தணி, ஜூலை 18: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வருகிற 24ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கோயில் தக்கார் ஆய்வு செய்தார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா வரும் 24ம் தேதி ஆடி அசுவினியுடன் தொடங்குகிறது. 25ம் தேதி ஆடிப் பரணி, 26ம் தேதி ஆடி கிருத்திகை ஆகிய விழாக்கள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து  26ம் தேதி இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. முதல் நாள் திருவிழாவில், தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

முதல் நாள் தெப்பல் மூன்று முறை சரவணப்பொய்கை குளத்தில் வலம் வரும். இதேபோல் இரண்டாம் நாளில் ஐந்து முறையும், மூன்றாம் நாளில் ஏழு முறையும் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வருவார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரவணப்பொய்கை திருப்படிகளில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும், தெப்பத்தில் முருகனுடைய பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறும். இந்த விழாவிற்காக திருக்கோயில் சார்பில் சரவணப்பொய்கை  குளத்தில் தெப்பல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெயசங்கர் மற்றும் கோயில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...