×

குற்றங்களை தடுக்க எஸ்.பி. தொடங்கி வைத்தது போலீசாரின் அலட்சியத்தால் முடங்கிய புகார் பெட்டி திட்டம்: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருவள்ளூர், ஜூலை 18: குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட புகார் பெட்டியை, போலீசார் திறக்காததால் அதில், துண்டு பிரசுரங்கள் உள்ளன. இதை முறையாக திறந்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், குற்றங்களை தடுக்கும் எஸ்.பி.,யின் திட்டம் வீணாகியுள்ளது.மாவட்டத்தில் விதிமீறி மணல் எடுத்தல், பாலியல் தொல்லை, கஞ்சா விற்பனை, மது விற்பனை, திருட்டு, கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதைத் தெரிவிக்க முடியாத மனநிலையில் பொதுமக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.இதனால், கிராமங்கள் தோறும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், காவல் துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட போலீசார் பொறுப்பாளர்களாக இருந்து, புகார் பெட்டியில் போடப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.மனு அளித்தவர் தொடர்பான விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்க மாட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால், திட்டத்தை துவக்கி 3 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திருவள்ளூர் நகரம் உட்பட எந்த கிராமங்களிலும் புகார் பேட்டி உள்ளதே தவிர, அதை போலீசார் வந்து திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பல கிராமங்களில் கிராம மக்கள் பல்வேறு புகார்களுடன், புகார் பெட்டியை தேடும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவால் கண் துடைப்புக்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளதே தவிர, அதை முறையாக செயல்படுத்துவதில் போலீசார் மெத்தனமாக உள்ளனர்.கிராமங்களில் ஏராளமான குற்றங்கள் நடந்துவருகிறது. இதுபோன்ற புகார்களை நேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்று கொடுக்க இயலவில்லை. இனியாவது இந்த நல்ல திட்டத்தை முறையாக செயல்படுத்த மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்’’’’ என்றனர்.எனவே, புகார் பெட்டிகளில் இதுவரை பெறப்பட்ட புகார்கள் குறித்தும், நடவடிக்கை குறித்தும் அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் எஸ்.பி., விசாரணை செய்ய வேண்டும். மேலும், முறையாக திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...