×

திருவள்ளூர் அருகே தண்ணீரை வீணாக்கும் சென்னை குடிநீர் வாரியம்

திருவள்ளூர், ஜூலை 18: சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, 1944ம் ஆண்டு கொற்றலை ஆற்றின் நடுவில் பூண்டி ஏரி கட்டப்பட்டது. நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்த தண்ணீரும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனால், பூண்டி ஏரி தற்போது முற்றிலும் வறண்டு கிடக்கிறது.இதையடுத்து, சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க பூண்டி ஏரியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டூர், காரணை, சிறுவானூர், வெள்ளியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில், தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நீர் உந்து நிலையத்தில் பெரிய தொட்டியில் சேகரிக்கின்றனர்.இதற்கென, ஒரு மணி நேரத்துக்கு ₹42 வீதம் விவசாயிகளுக்கு பணம் தருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 பகலில் சென்னை குடிநீர் வாரியத்துக்கும், இரவில் விவசாய நிலத்துக்கும் விவசாயிகள் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இவ்வாறு பெறப்படும் தண்ணீர், நீர் உந்து நிலையத்தில் இருந்து, குழாய்களின் மூலம் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.இவ்வாறு விவசாயிகளிடமிருந்து பணம் கொடுத்து பெறப்படும் தண்ணீர், நீருந்து நிலையத்தில் உள்ள பெரிய தொட்டிகளில் நிரம்பி, புல்லரம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் வீணாக வெளியேறி வருகிறது. இதை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதால், அரசு பணம் வீணாகி வருகிறது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...