×

வெளிர்மஞ்சள் வண்ண பட்டில் அத்திவரதர் காட்சி: அர்ச்சகர்களை உள்ளேவிட மறுத்ததால் போலீசாருடன் வாக்குவாதம்

சென்னை, ஜூலை 18: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூ, வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.  மேலும், பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 17 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.  மேலும் குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று அத்தி வரதர் வெளிர் மஞ்சள் நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

போலீசாருக்கும் அர்ச்சகர்களுக்கும் கடும் வாக்குவாதம் : 20 நிமிடம் சாமி தரிசனம் நிறுத்தி வைப்பு: அத்தி வரதர் வைபவத்திற்கு இரண்டு பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனம், மேற்கு கோபுரம் வழியாக விஐபி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விஐபிகள் தரிசனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே சென்று அத்தி வரதரை தரிசனம் செய்ய இயலும். மேலும் கோயிலில் பணிபுரியும் பணியாளர்கள், அர்ச்சகர்கள், மற்ற துறை ஊழியர்கள், செய்தியாளர்கள் பணியாற்ற என மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை காண்பித்தால் மட்டுமே விவிஐபி தரிசனத்தில் அவர்கள் உள்ளே நுழைந்து அவருக்கு உண்டான பணியை மேற்கொள்ள முடியும். ஆனால் சமீபகாலமாக காவலர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை வைத்திருந்தாலும் கோயில் வளாகத்துக்குள் அவர்களை அனுமதிக்க தொடர்ச்சியாக மறுத்து வந்தனர். இதனால் ஏற்கனவே போலீசாருக்கும் மற்ற துறை ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அத்திவரதர் பூஜை செய்ய பணிக்குச் சென்ற பூசாரிகளை அரை மணி நேரத்துக்கு மேலாக காக்க வைத்து பிறகு பொது தரிசனத்தில் வரிசையில் வரும்படி போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்றுகூடி அத்தி வரதர் பூஜை செய்வதை நிறுத்தி காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என உறுதி அளித்ததின்பேரில் அர்ச்சகர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்