×

கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்: மக்கள் வரிப்பணம் வீணாவதாக புகார்

வாலாஜாபாத், ஜூலை 18: வாலாஜாபாத் ஒன்றியம், கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் கட்டி முடித்தும் ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும் அங்கன்வாடி மையத்தால், மக்கள் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில், கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. இந்த, அங்கன்வாடி மையம் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் காணப்பட்டது. இந்நிலையில்,  அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் என கிராம பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹ 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் உள்ளே தலைவர்களின் புகைப்படங்கள், குழந்தைகள் தங்களின் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையில் கட்டிடத்தின் உள் பகுதியில் உள்ள சுவர்களில் உயிர் மெய் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள் வரையப்பட்டுள்ளன.

மேலும், கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுவர்களில் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான பொம்மைகள் வரையப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி இரண்டு சாய் தளங்களும், ஒரு படிக்கட்டு என மூன்று வழிகள் இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளது. இத்தனை அம்சங்களும் பொருந்திய இந்த அங்கன்வாடி மையம் கட்டி, ஒரு ஆண்டுகளாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் இக்கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த அங்கன்வாடி மையத்தில் வரையப்பட்டுள்ள, சித்திரங்களும் எழுத்துக்களும் மாணவர்களின் பயன்பாடின்றி சிதலமடைந்து விடுமோ என்ற அச்சம் இப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இந்த அங்கன்வாடி மையத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு