மதுராந்தகம் அருகே பரபரப்பு கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையில் இளம் பெண் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

மதுராந்தகம், ஜூலை 18: மதுராந்தகம் அருகே, கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் இருந்து, நேற்று மாலை பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் மதுராந்தகம் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது,  கோணியில் கட்டி வீசப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து,  மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், தீயணைப்பு துறையினர் சென்று கிணற்றில்    கோணி மூட்டையில் இருந்த சடலத்தை மீட்டனர். பின்னர், பிரித்து பார்த்தபோது, அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது தெரியவந்தது. இவரை, யாராவது எங்கேனும் கொலை செய்துவிட்டு கோணி மூட்டையில் கட்டி, இந்த  கிணற்றில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என தெரியவந்தது.

இதையடுத்து, மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்துபோன பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், இவரை யாராவது கொலை செய்து கொண்டு வந்தது கிணற்றில் வீசி இருப்பார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்னையாக என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.மேலும், சுற்று வட்டார பகுதிகளில் பெண்கள் காணாமல் போய் உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்