×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மலைபோல் குவிந்து கிடந்த மருத்துவ கழிவுகள் அகற்றம்

செங்கல்பட்டு, ஜூலை 18: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று காலை கலெக்டரிடன் உத்தரவின் படி, அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த மருத்துவமனை வளாகத்தில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு அருகே, சிகிச்சையின்போது வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு, மலைப்போல் காட்சியளிக்கிறது. உடனுக்குடன் அகற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் எலும்பு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, காலரா வார்டு ஆகிய பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், கடும் துர்நாற்றத்தால் கடும் சிரமம் அடைகின்றனர். ஏற்கனவே உள்ள நோய்க்கு சிகிச்சை பெற வந்த தங்களுக்கு, மேலும் கூடுதல் நோய் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அங்கு இருக்கின்றனர்.

அதேபோல், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கும், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில், படத்துடன் வெளியானது. இதை தொடர்ந்து கலெக்டர் பொன்னையா மற்றும் சுகாதார துறை உயா் அதிகாரிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மருத்துவமனை டீன் உஷா சதாசிவத்துக்கு உத்தரவிட்டனர்.அதன்பேரில், டீன் உஷா சதாசிவன், மருத்துவ கண்காணிப்பாளர் சுதாகர், ஆர்எம்ஓ வள்ளிஅரசி ஆகியோர் நேற்று காலை குப்பைகள் குவிந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, நகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றினர். இந்த குப்பை கழிவுகள் சுமார் 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. நீண்ட நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருந்த மருத்துவ கழிவுகள், குப்பைகள் நேற்று காலை அகற்றப்பட்டதால் பொதுமக்களும்,நோயாளிகளும் நிம்மதியடைந்தனர். இதை தொடர்ந்து தினகரன் நாளிதழுக்கு பொதுமக்களும், நோயாளிகளும் நன்றியை தெரிவித்தனா்.இதேபோல் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...