×

வாலாஜாபாத்தில் சிறு மழைக்கே சேறும் சகதியுமாக மாறிய வட்டாட்சியர் அலுவலக பாதை: பொதுமக்கள் சேற்றில் விழும் அவலம்

வாலாஜாபாத், ஜூலை 18: வாலாஜாபாத்தில் சிறு மழைக்கே சேறும் சகதியுமான வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் பாதையால், பொதுமக்கள் சேற்றில் விழுந்து எழுந்து செல்லும் அவலம் காணப்படுகிறது.வாலாஜாபாத் பேருந்து நிலையத்தின் அருகில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகின்றது. இங்கு, பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக  நாள்தோறும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக  மண், கல் ஆகியவை ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கொட்டப்பட்டுள்ள மண் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இந்த சேறும் சகதியுமான வழியில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியவர்களும், அரசு அலுவலர்களும் கடுமையாக சிரமப்பட்டு அலுவலகம் வருகின்றனர். மேலும், ஒரு சில நேரங்களில் முதியவர்கள் இந்த சேற்றில் வழுக்கி விழுந்து சேற்றை வாரிப்பூசிக் கொண்டு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிக்காக வந்து செல்கின்றோம். தற்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்காக உபயோகப்படுத்தும் மணல்கள் இங்கு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனை, சீரமைக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியும் ஒப்பந்ததாரர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகம் போவதற்கு சாலை இன்றி சேறும் சகதியுமான பகுதியில் சென்று வருகிறோம். இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகமோ அல்லது ஒப்பந்ததாரர் முன்வந்து இந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...