×

கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் ஓய்வு பெற்ற காவலர் குடும்பத்தினர் குடிநீர் கேட்டு சாலை மறியல்

* கடும் போக்குவரத்து பாதிப்பு
* வாகன ஓட்டிகள் அவதி
திருக்கழுக்குன்றம், ஜூலை 18: கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில், ஓய்வு பெற்ற காவலர் குடும்பத்தினர் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அங்குள்ள கல்குவாரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடியிருப்பு பகுதியில் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி காரணமாக, அந்த கல்குவாரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த, ஒரு வாரமாக டேங்கர் லாரி குடிநீர் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால், ஒரு வாரமாக போதிய குடிநீர் கிடைக்காமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டோர் நேற்று கேளம்பாக்கம் - வண்டலூர் சாலை மேலைக்கோட்டையூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் மற்றும் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘உடனடியாக இந்த குடிநீர் பிரச்னையை தீர்க்க, தேவையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...