திருவிக நகர் தொகுதியில் சில வார்டு மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்

* தாயகம் கவி எம்எல்ஏ கோரிக்கை
* நடவடிக்கை எடுப்பதாக உறுதி
சென்னை, ஜூலை 18: திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில வார்டுகளில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக பட்டா கேட்டு போராடி வந்தனர். அவர்களின் நிலையை நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தில் திமுக எம்எல்ஏ தாயகம் கவி எடுத்துரைத்தார். இதையடுத்து அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என அமைச்சர் உறுதி கூறினார்.திருவிக நகர் சட்டமன்றத் தொகுதியில் 72, 73, 75, 76 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வஉசி நகர், சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர், சத்தியவாணிமுத்து நகர், பென்ஷனர் லைன், கரிமேடு, எஸ்.எஸ்.புரம், வள்ளுவர் தெரு, பிரிக்ளின் சாலை, கே.எம்.கார்டன், கார்ப்பரேஷன் லேன் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில், நீண்ட காலமாக பட்டா வழங்கப்படாமல் இருப்பதாக பலமுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடம் இப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது திருவிக நகர் திமுக எம்எல்ஏ தாயகம் கவியிடம் இந்த பகுதி மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏ தாயகம் கவி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘‘குறிப்பிட்ட இடத்தில் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி மக்கள், ‘நாங்கள் இப்பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்தும், எங்களுக்கு பட்டா வழங்க எந்த கட்சியினரும் முன்வரவில்லை. இதையடுத்து திமுக எம்எல்ஏ தாயகம் கவியிடம் முறையிட்டோம். அவர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பவே, அதற்கு அமைச்சர் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளார். திமுக எம்எல்ஏவின் நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்’’ என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED தாம்பரம் சானடோரியத்தில் கூடுதல்...