பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 18: பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவில் ஊராட்சிகள் உள்ளன என்று தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டினார்.

  சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) பேசியதாவது:  ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி ₹5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தற்போது வரை இங்கு 60 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மழைகாலம் வரும் நிலையில் இப்பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்.

 அமைச்சர் வேலுமணி: உறுப்பினர் சொன்ன பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம், இருபுற தடுப்புச் சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைப்பது போன்றவற்றுக்காக நபார்டு திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரங்கள் மூலம் மொத்தம் ₹8.21 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது. பாலப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

இருபுற தடுப்பு சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும், வரும் நவம்பர் 30ம்தேதிக்குள் முடிக்கப்படும். இப்பாலம், பல்லாவரம், மணப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், கவுல் பஜார் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இதன் மூலம் 20 கி.மீ. அளவிற்கு பயண தூரம் குறையும் தா.மோ.அன்பரசன்: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல ஊராட்சிகள் மின் இணைப்புக்கு கூட பணம் கட்ட முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலையிலும் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. அங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் அதிகளவு குப்பை தேங்கி கிடக்கிறது. அமைச்சர் வேலுமணி: சம்பளம் வழங்க முடியாத நிலையில் எந்த ஊராட்சிகளும் இல்லை. அவர்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிமென்ட் சாலைகள் என்பது ஒரு கிமீ தூரத்துக்கு உட்பட்ட சிறு சாலைகளாகும். இவற்றை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ₹200 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ஊராட்சிகளுக்கு தேவையான அதிக நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: