×

விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பு நாகர்கோவிலில் 7 இடங்களில் சப் கலெக்டர், அதிகாரிகள் குழு ஆய்வு கடைகள், ஆக்ரமிப்புகள் அகற்ற முடிவு

நாகர்கோவில், ஜூலை 18:  நாகர்கோவிலில் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில், சப் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்கனவே காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்து பகுதி என கண்டறியப்பட்ட இடங்களை தவிர்த்து கூடுதல் இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.  இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் மட்டும் சுமார் 10 இடங்கள் வரை விபத்து பகுதிகளாக வருகின்றன. இந்த இடங்களை விபத்துக்களை தவிர்க்க என்ன செய்யலாம்? என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மேற்பார்வையில் செயல்படும் இந்த குழுவினர், நாகர்கோவில் சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நேற்று காலை நாகர்கோவில் மாநகர பகுதிகளில் விபத்து பகுதிகளை ஆய்வு செய்தனர்.நாகர்கோவில் மாநகர பொறுத்தவரை வெட்டூர்ணிமடம், கட்டையன்விளை மின் வாரிய அலுவலகம், ஜோசப் கான்வென்ட் பள்ளி எதிரில் உள்ள பகுதி, வடசேரி பஸ் நிலைய உழவர் சந்தை திருப்பு பகுதி (இந்த பகுதி வழியாக வடசேரி பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருகின்றன. கன்னியாகுமரி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் இந்த வழியாக வெளியேறுகின்றன), வடசேரி பஸ் நிலையத்தில் திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெளியேறும் காசி விஸ்வநாதர்கோயில் திருப்பு, வடசேரி பள்ளி வாசல் பகுதி, ஒழுகினசேரி திருப்பு பகுதிகள் விபத்து பகுதிகளாக உள்ளன.

இந்த பகுதிகளில் நேற்று சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஏ.எஸ்.பி. ஜவகர், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த இடங்களில் விபத்துக்களை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. விபத்து பகுதிகளில், சாலை ஓரங்களில் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரை சப் கலெக்டர் விஷ்ணுசந்திரன் கேட்டுக் கொண்டார்.  மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை சார்பில் செய்ய வேண்டிய  அறிவிப்பு பலகைகள், சாலைகளில் எச்சரிக்கை வரைகோடுகள், ஒளிரும் விளக்குகள் உள்ளிட்டவையும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என சப் கலெக்டர் கூறினார். இந்த அறிக்கை கலெக்டரின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

சுரங்கப்பாதை வழியாக பள்ளி மாணவிகள் நாகர்கோவில் ேஜாசப் கான்வென்ட் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அங்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர். பள்ளிக்குள் வரும் போதும், பள்ளி முடிந்து செல்லும் போதும் மாணவிகள் அனைவரும் பள்ளியில் இருந்து இடதுபுறமாக உள்ள நடைபாதை வழியாக சுரங்கப்பாதைக்கு வந்து அண்ணா பஸ் நிலையத்துக்குள் வரும் படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அதன்படி நேற்று மாலையில் பள்ளி குழந்தைகள் இந்த வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதே போல் மாணவிகளை அழைக்க வரும் பெற்றோர், கணேசபுரம் ரோட்டில் நின்று அழைத்து செல்லவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சாலை ஓர பைக்குகள், ஆட்டோக்களால் விபத்து அபாயம் வடசேரி பஸ் நிலையத்தின் உழவர் சந்தை திருப்பு பகுதியில் சாலையின் வலதுபுறம் சில சமயங்களில் ஆட்டோக்கள் இடையூறாக நிற்கின்றன. இந்த திருப்பு பகுதியில் பஸ்கள் உள்ளே திரும்பும் போது எதிரே வாகனங்கள் வந்தால் ஆட்டோக்கள் நிற்பதால் விபத்து அபாயம் உருவாகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள மீன் சந்தைக்குள் இருந்தும் பைக்குகள் வேகமாக வருவதுடன், இந்த பகுதியில் சாலை ஓரங்களில் அடிக்கடி நிற்கும் பைக்குகள், கார்கள், ஆட்டோக்களால் நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு