×

ஈத்தாமொழி அருகே நிலம் வாங்கி தருவதாக ஓட்டல் உரிமையாளரிடம் ₹5 லட்சம் மோசடி அதிமுக நிர்வாகி மீது எஸ்.பி.யிடம் புகார்

நாகர்கோவில், ஜூலை 18 : ஈத்தாமொழி அருகே ஓட்டல் உரிமையாளருக்கு நிலம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு மிரட்டும் அதிமுக நிர்வாகி மீது எஸ்.பி.யிடம் புகார்  அளிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் ஈத்தாமொழி வணிகர் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும், அதிமுக எம்.ஜி.ஆர். மன்றத்தில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவருக்கும் பழக்கம் உண்டு. அதிமுக நிர்வாகி நிலம் வாங்கி விற்கும் புரோக்கராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் குழந்ைதவேல் நிலம் வாங்கி வீடு கட்டும் எண்ணத்தில் இருப்பதை அறிந்த, அதிமுக நிர்வாகி தர்மபுரம் வில்லேஜுக்கு உட்பட்ட பகுதியில் நல்ல வீட்டுமனை உள்ளதாகவும், அரசின் அனுமதி பெற்ற வீட்டுமனை என்றும் கூறி உள்ளார். இவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, குழந்தைவேல் நிலத்தை பார்க்க சென்றுள்ளார். இடத்தை பார்த்ததும் பிடித்ததால், அதை வாங்க குழந்தைவேல் சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த நிலம் மணிக்கட்டி பொட்டலை சேர்ந்த ஒருவரின் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அவர்கள் வெளியூர்களில் இருப்பதால் சரலூைர சேர்ந்த ஒருவருக்கு அதிகார ஆவணம் எழுதி கொடுத்திருப்பதாகவும் கூறி உள்ளார். அதற்கான நகலையும் காண்பித்து உள்ளார். இதை நம்பி முன் பணமாக ரூ.10 ஆயிரத்தை குழந்தைவேல் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.5 லட்சம் கொடுத்தால் உடனடியாக கிரயம் செய்து விடலாம் என கூறினர். அவர்களின் பேச்சை நம்பி, குழந்தை வேலும் வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சொத்தை எழுதி கொடுக்காமல் வேண்டுமென்றே காலம் கடத்தி வந்துள்ளனர். பின்னர் குழந்தைவேலு, சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்த போது, மேற்படி சொத்துக்கு அப்ரூவல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது பற்றி அதிமுக நிர்வாகியிடம் கேட்ட போது, நான் ஆளுங்கட்சியை சேர்ந்தவன். எனது மனைவியும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். எனவே அப்ரூவல் வாங்கி தருவேன் என கூறி இருக்கிறார். ஆனால் சொத்துக்கு அப்ரூவல் வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்க வில்லை. பலமுறை குழந்தைவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று கேட்ட போது, என் வீட்டுக்கு பணம் கேட்டு வருவதை நிறுத்தி விடுங்கள். கூடிய விரைவில் உங்களுக்கு சொத்தை எழுதி தர ஏற்பாடு செய்கிறேன். இனி எனது வீட்டுக்கு வந்தால் குடும்பத்துடன் தொலைத்து விடுேவன் மிரட்டி உள்ளார். இது பற்றி குழந்தைவேலு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் வந்து புகார் அளித்து உள்ளார். இது பற்றி குழந்தைவேலு கூறுகையில், அதிமுகவில் இருப்பதால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பணத்தை தர முடியாது என கூறுகிறார். நான் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை ஆசை வார்த்தை கூறி வாங்கி ஏமாற்றி விட்டு, தர மறுக்கிறார்கள். என்னை நம்பிக்கை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...