×

₹1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

விழுப்புரம், ஜூலை 18: விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் கடந்த 2017ல் ஆகஸ்ட் 9ம் தேதி டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி, விழுப்புரம் நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள் மற்றும் மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, காணை ஒன்றியத்தில் உள்ள குடியிருப்புகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய இணை மேலாண்ைம இயக்குநர் நிர்மல்ராஜ், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் அசோக் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுசீலா, மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கூனிமேடு பகுதியில் தள ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தேவையான ஆய்வுகள், விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்தல் போன்ற பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய இணை மேலாண்மை இயக்குநர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அனைத்து அலுவலர்களும் களப்பணியை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் நியமித்துள்ள தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சிரம்யா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை