வருவாய்துறையினரிடம் சப்-கலெக்டர் விசாரணை

புதுச்சேரி, ஜூலை 18:      ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர மாணவி ஒருவருக்கு போலி ஆவணங்களுக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கி விவகாரம் தொடர்பாக தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் சப்-கலெக்டர் சுதாகரன் விசாரணை நடத்தினார்.  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150,   காரைக்கால் கிளையில் 50 என 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் புதுவை ஒதுக்கீடாக 54 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான ஜிப்மர் எம்பிபிஎஸ் தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து, ஜூன் 7ம் தேதி தேர்வு முடிவு மற்றும் தரவரிசை  பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் புதுச்சேரி ஒதுக்கீட்டில் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களை நீக்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகத்திடம் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் புகார் தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, மருத்துவ கவுன்சில், முதல்வர், கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்டோரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

 இருப்பினும், ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தப்படி எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வை நடத்தியது. இதில் புதுச்சேரிக்கான 54 இடங்களுக்கு ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு நடந்தது. இதில் குடியிருப்பு, சாதி உள்ளிட்ட சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. மேலும், புதுச்சேரி மாணவர்களின் குடியிருப்பு சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இக்கலந்தாய்வில் சென்னையை சேர்ந்த மாணவி கிருத்திகா பங்கேற்று, புதுச்சேரி ஒதுக்கீட்டில் சீட் பெற்றார். அந்த மாணவியின் தந்தை குமார் புதுவை பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்து குடியிருப்பு சான்றிதழ் பெற்று, ஜிப்மரில் மகளை சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இதன்  மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. வருவாய்த்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், உச்சநீதிமன்றம், தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர், புதுவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை ஆஜராகும்படி நேற்று முன்தினம் சப்-கலெக்டர் (வடக்கு) சுதாகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பேரில் தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினர்.  இதனை அறிக்கையாக தயார் செய்து, கலெக்டரிடம் அளிக்கவுள்ளார். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையே மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, புதுவை பொறியியல் கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,  பொறியியல் கல்லூரி வளாகத்தில், உள்ள குடியிருப்பில் தங்கி பணியாற்றும் பேராசிரியர் குமார், தன்னுடன் மகள் கிருத்திகா தங்கி இருப்பதாக பொய்யான தகவல் அளித்து, போலி இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளார். அதன் மூலம் ஜிப்மர் கல்லூரியில் புதுவை ஒதுக்கீட்டில் கிருத்திகா சீட் பெற்றுள்ளார். அவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கவில்லை என்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த பேராசிரியர் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: