காங். பிரமுகரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

பாகூர், ஜூலை 18:   தவளக்குப்பம் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பிரமுகரிடம் 2 பேர் பிளேடை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுவை அடுத்த தவளக்குப்பம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் குலசேகரன் (43), காங்கிரஸ் பிரமுகர். இவர் கடந்த 13ம் தேதி தவளக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.500 கொடுத்து ரூ.200க்கு பெட்ரோல் போட்டுள்ளார். மீதமுள்ள பணத்தை கேட்டபோது பின்னால் இருசக்கர வாகனத்துடன் வந்த 2 பேர் அந்த பணத்தில் எங்களுக்கு பெட்ரோல் போடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த குலசேகரன் அவர்களை திட்டிவிட்டு பெட்ரோல் பங்க் ஊழியரிடம் 300 ரூபாயை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.  சிறிது தூரத்தில் அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இருவரும், ஏன் நாங்கள் பணம் கேட்டால் கொடுக்க மாட்டாயா? என்று தரக்குறைவாக திட்டி பிளேடை காட்டி மிரட்டி பணத்தை கேட்டுள்ளனர். குலசேகரன் சத்தம் போட்டதும் அந்த 2 பேரும் பைக்கில் மாயமாகி விட்டனர். இது பற்றி குலசேகரன், தவளக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதில் ஒரு வாலிபர் பிடிபட்டுள்ளார். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி