புதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி, ஜூலை 18:   மடுவுபேட் ரவுடி முரளி கொலையில் சாட்சிகளிடம் விசாரணை நடப்பதையொட்டி புதுவை நீதிமன்றத்தில் எஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட்டை சேர்ந்தவர் முரளி. ரவுடியான இவர், கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுந்தர் தலைமையிலான கும்பல் படுகொலை செய்தது. தட்டாஞ்சாவடி வேலைவாய்ப்பு அலுவலகம் அருகேவுள்ள காலி மனையில் அவரை வெட்டி கொன்று விட்டு, பைக்கில் முரளியின் சடலத்தை எடுத்துச் சென்றபோது கொக்கு பார்க் அருகே உடல் கீழே விழுந்ததால் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இக்கொலை தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ரவுடி சுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக தட்டாஞ்சாவடி தாதா செந்திலும் சேர்க்கப்பட்டு இருந்தார். நீண்டநாட்களாக அவர், தலைமறைவாக இருந்த நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு. சிறப்பு அதிரடிப்படை மதுரையில் கடந்தாண்டு கைது செய்தது. பின்னர் அவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் செந்தில் மீது குண்டாஸ் பாய்ந்தது. இதற்கிடையே இவ்வழக்கில் ஜாமீன் கோரி முக்கிய குற்றவாளிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், இவ்வழக்கை விரைவாக நடத்தி முடிக்க போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த நிலையில் புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் முரளி கொலை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா உத்தரவுக்கிணங்க புதுச்சேரி நீதிமன்றம் முன்பு கிழக்கு எஸ்பி மாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் (உருளையன்பேட்டை), கார்த்திகேயன் (சிறப்பு அதிரடிப்படை) ஆகியோர் தலைமையில் 6 எஸ்ஐக்கள், உதவி எஸ்ஐக்கள், ஏட்டுகள், காவலர்கள் என 25க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களை தவிர்த்து விசாரணைக்கு வந்த நபர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

 இவ்வழக்கில் சாட்சிகளாக கொலை செய்யப்பட்ட ரவுடி முரளியின் தாய் உள்பட 7 பேர் நேற்று ஆஜராகினர். குற்றவாளிகள் தரப்பில் தட்டாஞ்சாவடி செந்தில், சுந்தர் உள்ளிட்ட 11 பேரும் ஆஜராகினர். சாட்சிகளுக்கு எந்த வகையிலாவது எதிரிகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் அங்கு தீவிர கண்காணிப்பு போடப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: