போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் அவசியம்

புதுச்சேரி,  ஜூலை 18:  நாடாளுமன்ற மக்களவையில் புதுச்சேரி  எம்பி வைத்திலிங்கம், சாலை  போகுவரத்து சம்பந்தமான மானிய கோரிக்கையின் மீது புதுச்சேரி மக்கள்  எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்னைகள் குறித்து பேசினார்.

 அப்போது,  புதுச்சேரி ஒரு சுற்றுலா கேந்திரமாக திகழ்கிறது. மேலும் அதிகமான சுற்றுலாப்  பயணிகளை ஈர்க்கிறது மற்றும் போக்குவரத்து அதிகரிப்பதால் அதிக போக்குவரத்து  நெரிசலை எதிர்கொள்கிறது.  புதுச்சேரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை  NH-66, NH-32, மற்றும் ECR ஆகியவை கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து  வருகின்றன, இது நாளுக்குநாள் அதிகரிக்கிறது. நான்கு பெரிய சாலை  சந்திப்புகள் உள்ளன. அவை மேம்பாலத்துக்காக ஆய்வு செய்யப்பட்டன. பல  இடங்களில்  போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.   புதுச்சேரி அரசு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கியமான சாலை  சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க உத்தேசித்துள்ளது. இந்த நான்கு  சந்திப்புகளுக்கும் ஏறக்குறைய ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டு  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு (MORTH)  அனுப்பப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.

  மேற்கண்ட திட்டங்களை முன்னுரிமையில் அனுமதி அளிக்க வேண்டும்.  தற்போது 2  வழிச்சாலையாக இருக்கும் என்.எச்- 32 விழுப்புரம்- புதுச்சேரி- கடலூர்  சாலையை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உடனே நான்கு வழிச்சாலையாக  அகலப்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து  நெரிசலை குறைக்க ஒரு இணையான சாலையை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதற்கு  அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இந்த புதிய சாலையை உருவாக்குவதன் மூலம் பயண  நேரத்தை கணிசமாக குறைக்க முடியும்.  

Related Stories: