ஒப்பந்த பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்

புதுச்சேரி, ஜூலை 18:     புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜாங்கம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  புதுவையில் 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 3 பட்டமேற்படிப்பு மையங்களும் உள்ளது. இதில் 150க்கும் அதிகமான பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த 59 பேர் உதவி பேராசிரியர்களாக யுஜிசி கூறக்கூடிய தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். திடீரென இந்த ஒப்பந்த ஆசிரியர்களும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உதவி பேராசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மத்திய தேர்வாணையம் மூலமாக 102 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது. இவர்களில் இரண்டு  ஆசிரியர்கள் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற அனைவரும் தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் புதுச்சேரி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய 100 பணியிடங்கள் பறிபோயுள்ளது.

Advertising
Advertising

 புதுச்சேரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மத்திய தேர்வாணையத்திற்கு தாரை வார்ப்பது புதுச்சேரி இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகவே புதுச்சேரி அரசு புதுச்சேரிக்கு என்று தனி பணி தேர்வாணையம் ஏற்படுத்த வேண்டும். அதுவரை  புதுச்சேரி அரசாங்கமே முடிவு செய்து இம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பேராசிரியர் பணி உள்ளிட்ட பணியிடங்கள் கிடைப்பதை உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: