நீர்பாசன பிரிவு அலுவலகத்தில் எம்எல்ஏ போராட்டம்

புதுச்சேரி,  ஜூலை 18:    புதுச்சேரி பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்ட நீர்பாசன பிரிவு மூலம் உப்பளம்  தொகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர்  குடிப்பதற்கு தகுதியற்ற நிலையில் வினியோகிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள்  தொகுதி அதிமுக எம்எல்ஏ அன்பழகனிடம் முறையிட்டனர். திருக்காஞ்சியில்  இருந்து குழாய்கள் மூலம் எடுத்து வரப்படும் இந்த குடிநீர்  சுத்திகரிக்கப்படாமல் மக்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு நோய்களின்  தாக்குதலுக்கு மக்கள் ஆளாவதாக சட்டமன்றத்தில் அன்பழகன் எம்எல்ஏ  முறையிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பலகட்ட போராட்டங்களை  நடத்தியும் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு நிர்வாகம் அந்நீரை  சுத்திகரிப்பு செய்து அனுப்புவதற்கான எந்த பணிகளையும் முன்னெடுக்கவில்லை.    இந்த நிலையில் அன்பழகன் எம்எல்ஏ நேற்று உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில்  உள்ள பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அலுவலகத்துக்கு தொகுதி செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி, சக்திவேல் உள்ளிட்ட  நிர்வாகிகளுடன் சென்றார். அங்கிருந்த செயற்பொறியாளர் ரவிச்சந்திரனிடம், நீண்ட காலமாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை  நிவர்த்தி செய்ய திட்டமிட்டு தாமதம் செய்வதாக கூறி போராட்டத்தில்  ஈடுபட்டார். இதையடுத்து எம்எல்ஏவை சமாதானப்படுத்திய செயற்பொறியாளர், தான்  இப்பணிக்கு வந்து சில மாதமே ஆவதால் இன்னும் 2 மாதம் அவகாசம் கொடுத்தால் அதை  நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர் தனது கட்சி  நிர்வாகிகளுடன் அங்கிருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு  நிலவியது.

Related Stories: