×

புதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை

சேத்தியாத்தோப்பு, ஜூலை 18: வாலாஜா ஏரியையும், பரவனாற்றையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் பரவனாறு மற்றும் வாலாஜா ஏரி அமைந்துள்ளது. சுமார் 60 வருடத்திற்கு முன் 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஏரியாக வாலாஜா ஏரி இருந்துள்ளது. அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்துள்ளது. இந்த ஏரியை வெட்டும்போது மண்ணில் புதைந்து கிடந்த பதினைந்து கதவுகள் கொண்ட ஷட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த ஏரியின் மூலம் முப்போகமும் விவசாயிகள் விளைவித்திருக்கின்றனர். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்பு கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏரியை பல கோடி மதிப்பீட்டில் 4 ஆண்டுக்கு முன் என்எல்சி நிர்வாகம், புதர்மேடாக இருந்த வாலாஜா ஏரியையும், பரவனாற்றையும் தூர்வாரி புத்துயிர் பெற வைத்தது. இதனை பொதுப்பணி துறை முறையாக பராமரிக்காததால் தற்போது ஏரியையும், பரவனாற்றையும் சம்புகள், செடி கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. வாலாஜா ஏரியில் பனை விதைகளை போடுவதாக கூறிய மாவட்ட நிர்வாகம், போடாமலேயே விட்டு விட்டதாக என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியையும், பரவனாற்றையும் பொதுப்பணி துறை முறையாக பராமரித்து வந்தால் கடலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வறட்சியே இருக்காது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இந்த ஏரியையும், என்எல்சியின் உபரி நீரையும் நம்பித்தான் மருவாய், நயினாகுப்பம், கரைமேடு, பின்னலூர், கொளக்குடி, கருங்குழி, கல்குணம், அந்தராசுபேட்டை, அரங்கமங்கலம், மருதூர், பிரசன்னராமாபுரம், தலைக்குளம், அம்பாள்புரம், உளுத்தூர், நத்தமேடு, எல்லைக்குடி, ஆலம்பாடி, கொத்தவாச்சேரி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர். மேலும் இந்த ஏரியில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பெரு வெள்ளம் ஏற்பட்டு பரவனாறு பாலத்தின் வழியாக பேருந்து போக்குவரத்து ஒரு வாரம் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, வாலாஜா ஏரியையும், பரவனாற்றையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்