×

வண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

கடலூர், ஜூலை 18: கடலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து தூர் வாரப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை வணிக நோக்கில் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் ஏரி மற்றும் குளங்களில் போதுமான அளவு நீரின்றி வறண்டுள்ளன. இச்சூழ்நிலையை பயன்படுத்தி விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தவும், நீர் நிலைகளை தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகப்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நீர் நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பேரூராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 792 ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க கடலூர் மாவட்ட ஆட்சியரால்  விவசாயிகள் பயன்படும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டை வணிக நோக்கத்தோடு வெளி ஆட்களுக்கு வழங்குவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டை வெளி நபர்களுக்கு வணிக நோக்கத்தோடு பயன்படுத்தப்படுமேயானால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்வதோடு, விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது