எம்பி, எம்எல்ஏக்களும் உடன் சென்றனர் வேலூர் மக்களவை தொகுதிக்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாள்

வேலூர், ஜூலை 18:வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ேபாட்டியிடும் கதிர்ஆனந்த் ேநற்று கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். எம்பி, எம்எல்ஏக்களுடன் உடன் சென்றனர்.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம் ஏற்கனவே மனு தாக்கல் செய்தார்.  மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மனுத்தாக்கல் தொடங்கியது. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் பிற்பகல் 2 மணியளவில் மனுத் தாக்கல் செய்தார்.  அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வில்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், திமுக அவைத்தலைவர் முகமதுசகி, வேலூர் மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, விசி கட்சி அமைப்பு செயலாளர் நீல சந்திரகுமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கதிர் ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அடையாள அட்டையுடன் வந்த அரசு ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வேலூர் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 4 டிஎஸ்பிகள் மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுயேச்சைகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 8 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 31 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வெற்றி பிரகாசமாக உள்ளது துரைமுருகன் பேட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்று முதலே பிரசாரத்தை தொடங்குவோம். எதிர் போட்டியாளர் பற்றி நான் பேச விரும்பவில்லை. எங்களை பொறுத்தவரை வெற்றி பிரகாசமாக உள்ளது. மத்திய பாஜக ஆட்சியின் மீது முன்பு கொண்டுள்ள எங்கள் எண்ணம் மாறவில்லை. மாநில சர்க்கார் அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையிலும் எங்களுக்கு மாறுபாடு இல்லை. ஹைட்ரோகார்பனுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பதை நாங்கள் பலமாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக செய்தால் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டி இருக்கும்’ என்றார்.

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பு வேட்பாளர் கதிர்ஆனந்த நிருபர்களிடம் கூறுகையில்,‘ தபால் துறையில் தமிழில் தேர்வு எழுதலாம் என்பது திமுக எழுப்பிய குரலுக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் மக்கள் திமுக செய்த சாதனைகளை மறக்க மாட்டார்கள். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை கண்டிக்கும் வகையில் தேர்தல் அமையும். சாதனைகளை சொல்லித்தான் வாக்கு கேட்கிறோம். வருமான வரி சோதனை குறித்து கவலை இல்லை. நான் இந்த மண்ணுக்கு புதியவன் அல்ல’ என்றார்.

Related Stories: