தமிழகம் முழுவதும் நிர்வாக மானியம் வழங்கப்படாமல் அரசு நிதியுதவி பள்ளிகள் தத்தளிப்பு ஆசிரியர் ஊதியத்தில் பிடித்தம் செய்து சமாளிக்கும் நிர்வாகங்கள்

வேலூர், ஜூலை 18:நிர்வாக மானியம், பள்ளிக்கான மானியங்களை வழங்காததால் மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 538 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தவித்து வருகின்றன. தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் மொத்தம் 6 ஆயிரத்து 538 பள்ளிகள் அரசு நிதியுதவி பள்ளிகளாக உள்ளன. இதில் 1,513 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகளாகவும், 5,025 பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும் உள்ளன.

இப்பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவதுடன், இருக்கை, மேஜை, கரும்பலகை, சாக்பீஸ், பதிவேடுகள் உட்பட தளவாட பொருட்கள் வாங்கவும், பள்ளி பராமரிப்பு, மின்கட்டணம், குடிநீர் என பல அடிப்படை தேவைகளுக்கும் நிதியுதவியை வழங்குகிறது. பள்ளியின் நிர்வாகத்தை மட்டும் தனியாரோ அல்லது அறக்கட்டளைகளோ கவனித்துக் கொள்கின்றன. இப்பள்ளிகளுக்கான நிர்வாக மானியம் என்பது அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களது ஊதியத்தில் 2 சதவீதம் ஆகும். அதோடு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி மானியமாக தொடக்கப்பள்ளிகளுக்கு மாதம் ₹7 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிகளுக்கு ₹12 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
Advertising
Advertising

இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஊதியத்தை தவிர, பள்ளி நிர்வாக மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மானியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகளை நிர்வாகம் செய்வதில் அதன் நிர்வாக அமைப்புகள் திணறி வருகின்றன. இதுதொடர்பாக அரசு நிதியுதவி பள்ளியின் தாளாளர்கள் தரப்பில் கேட்டபோது, ‘முன்பு நாங்கள் ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதுடன், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும் பயன்படுத்திக் கொள்வோம்.  அதேபோல் மாணவர்களிடம் இருந்து சிறிய அளவில் ஆண்டு கட்டணத்தையும் வசூலித்துக் கொள்வோம். தற்போது அதுபோல் எந்த கட்டணத்தையும் வசூலித்துக் கொள்வதில்லை. மேலும் ஆசிரியர்கள் நியமனமும் தற்போது சிக்கலாகியுள்ளது. காரணம், அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை நிதியுதவி பள்ளிகளுக்கு மாற்றி அனுப்புகின்றனர்.

இதுபோன்ற நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் நிர்வாக மானியத்தையும், 2017ம் ஆண்டு முதல் பள்ளி மானியத்தையும் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பள்ளி பராமரிப்பு, மின்கட்டணம், பதிவேடுகள், இதர மாணவர்களுக்கான படிவங்கள் என பலவற்றுக்கும் நிதியின்றி தவித்து வருகிறோம்.  தற்போது ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் வரை பிடித்து இதனை சமாளித்து வருகிறோம். இதே நிலையைத்தான் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் சந்தித்து வருகின்றன. ஆனால் பாதிப்பு என்பது எங்களுக்கு அதிகம். எனவே, நிறுத்தி வைக்கப்பட்ட அரசு மானியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: