பேரணாம்பட்டு அருகே விறகு ஏற்றி வந்தபோது மலைபாதையில் 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி பாதையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு, ஜூலை 18: பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் நேற்று காலை விறகு ஏற்றி வந்த மினி லாரி, 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், மலைப்பாதையை அகலப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் சிவா(45), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான லாரியில் ஆந்திராவில் இருந்து விறகு ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு மலைப்பாதை வழியாக வேலூருக்கு புறப்பட்டார். இவருடன் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிளீனர் பரந்தாமன்(43) என்பவரும் வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பள்ளி மலைப்பாதையில் உள்ள குறுகிய வளைவில் லாரியை திருப்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

Advertising
Advertising

இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது. லாரி மற்றும் விறகுகளின் இடிபாடுகளில் சிக்கிய சிவா, பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது குறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பேரணாம்பட்டு வனவர் ஹரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார், பரந்தாமன் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மலைப்பாதையில் உள்ள குறுகிய வளைவால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், குறுகிய வளைவை அகலப்படுத்தக்கோரி பலமுறை அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.தொடர்ந்து, இந்த குறுகிய வளைவை அகலப்படுத்தி விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: