திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் குவிந்து கிடந்த மருத்துவ கழிவுகள் அகற்றம் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே குவிந்து கிடந்த மருத்துவக் கழிவுகள் தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று அகற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உள்நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாள்தோறும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தினை தூய்மைப்படுத்துவதற்கும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நாள்தோறும் மருத்துவமனை கழிவுகளை சேகரித்து, பிணவறை அருகே உள்ள காலியான பகுதியில் கொட்டி, பின்னர் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சேகரிக்கும் கழிவுகள், மருத்துவமனை நுழைவு வாயில் அருகே கொட்டப்பட்டு வருகிறது. பின்னர், அந்த கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் குப்பை கழிவுகளில்ல இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் மருத்துவ கழிவுகளும் கலந்துள்ளதால், தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மருத்துவமனை நுழைவு வாயில் அருகே குவிந்திருந்த குப்பைக் கழிவுகளை நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். பின்னர், டிராக்டர் மூலம் மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று, ஏற்கனவே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்த, பிணவறை பின்பகுதியில் பெரிய பள்ளம் தோண்டி குப்பைக்கழிவுகள் கொட்டினர்.

Tags :
× RELATED சீட்டம்பட்டு அரசு பள்ளியில் கட்டிடம்...