திருவண்ணாமலையில் ஆனி பிரமோற்சவம் நிறைவு அண்ணாமலையார் கோயில் ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி

திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்களாக நடைபெற்று வந்த, ஆனி பிரமோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் நிறைவாக நேற்று மதியம் 12 மணியளவில் ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. ஐயங்குளத்தில் கடந்த 2016ம் ஆண்டு தை மாதம் மஹோதய அமாவாசையையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரியின்போது கூட்ட நெரிசலால் குளத்தில் மூழ்கி 4 பேர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து, தீர்த்தவாரியின்போது பக்தர்களை குளத்தில் இறங்குவதற்கு அனுமதிப்பது கிடையாது.
எனவே, நேற்று நடந்த தீர்த்தவாரியையொட்டி போலீஸ் பாதுகாப்பு, தடுப்பு வேலிகள், தீயணைப்பு வீரர்கள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களை விட போலீசார் தான் அதிக அளவில் காணப்பட்டனர். தீர்த்தவாரியை காண 20 பக்தர்கள் மட்டுமே வந்திருந்தனர். எனவே வருங்காலத்தில் பக்தர்கள் தீர்த்தவாரியை காண அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED கண்ணமங்கலம் அரசு மகளிர்...