கோட்டூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜூலை16: கோட்டூரில் இருந்து சேந்தங்குடி செல்லும் சாலையில் நெருஞ்சினக்குடி - இருள்நீக்கி இடையே உள்ள பிரிவு சாலை போதிய பராமரிப்பின்றி பல்லாங்குழி சாலையாக மாறிக் கிடப்பதால் இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோட்டூரிலிருந்து சேந்தங்குடி வழியாக விக்கிரவாண்டி யம் வரை சாலை வசதி உள்ளது. இச்சாலையில் நெருஞ்சினக்குடியில் இருந்து இருள்நீக்கி வரை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இணைப்பு சாலை சுமார் 3கிமீ தூரத்திற்கு உள்ளது. இந்த சாலையை இருள்நீக்கி, சோத்ரியம், சின்னகுருவாடி, சிராங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள், வர்த்தகர்கள் நெருஞ்சினக்குடி வழியாக கோட்டூர் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நெருஞ்சினக்குடி இருள்நீக்கி இடையே அவசரகதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத சாலையில் சுமார் 3கிமீ தூரத்திற்கான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறி கிடக்கிறது. இந்த சாலையால் கடந்த 4 ஆண்டுகளாக இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர பயன் படுத்தி வருகின்றனர். அறுவடை சீசன் போது தங்களின் விளை பொருட்களை மெயின் ரோட்டிற்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடன் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED மின்மய பணிகள் முடிவுற்றதால்...