×

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்

திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரசவ வார்டு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 1200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்திலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுமட்டுமின்றி இங்குள்ள மருத்துவக்கல்லூரியில் ஆண்டு ஒன்றுக்கு 100 மாணவர்கள் வீதம் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான விடுதிகள் மற்றும் மருத்துவர்களுக்கான வீடுகள் போன்றவையும் இருந்து வருகிறது. இந்நிலையில் இவை அனைத்திலிருமிருந்து நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கான லிட்டர் கழிவுநீர் வெளியேறும் நிலையில் இந்த கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் இருந்து வருகிறது. ஆனால் இவை முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக கழிவுநீர் அனைத்தும் அங்கிருந்து வெளியேறி ஆங்காங்கே தேங்கி நிற்கும் நிலை தான் இருந்து வருகிறது. அதன்படி இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு அருகே கழிவுநீரானது மாதக்கணக்கில் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. மேலும் பிறந்த குழந்தைகள் இருக்கும் இடம் என்பதாலும் தொற்று நோய் விரைவில் பரவகூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதாலும் மற்ற வார்டுகளை விட இந்த பிரசவ வார்டு என்பது மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற நிலையில் இதுபோன்று கழிவுநீர் தேங்கி இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டும் என பொது மக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...