×

கறம்பக்குடியில் லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்

கறம்பக்குடி, ஜூலை 16: கறம்பக்குடியில் லேப்டாப் வழங்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18ம் ஆண்டு கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் தற்போது கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு கல்வி பயிலும்போது லேப்டாப் வழங்காததால் நேற்று கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாணவர்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கறம்பக்குடி சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது எங்களுக்கு வழங்காமல் சென்ற வருடம் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கூடாது. முதலில் எங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும், பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று போலீசார் கூறியதை அடுத்து தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கை விட்டு அனைவரும் ஊர்வலமாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அனைவரும் இங்கு வர வேண்டும் என்று மாணவர்கள் கூச்சலிட்டனர். வராவிட்டால் லேப்டாப் வழங்க கூடாது என்று வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று (நேற்று) லேப்டாப் வழங்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக கறம்பக்குடி, புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை, மற்றும் கந்தர்வகோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...