கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு, ஜூலை 16: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையம்பட்டியில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சுற்றுச்சூழல் மாசடையும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில், பவானி தாலுகா ஆண்டிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட காடையம்பட்டி பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆண்டிக்குளம் ஊராட்சி மற்றும் தொட்டிபாளையம் ஊராட்சியில் காடையம்பட்டி, செங்காடு குளத்துதோட்டம், புதுகாடையம்பட்டி, அரிஜனகாலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுதவிர, சுமார் 60 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது. மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்தை நம்பி காடையம்பட்டி ஏரியும் உள்ளது. கடந்த 30 ஆண்டாக இந்த பாசன பகுதிகளில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

இங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் பவானி ஆற்றில் கலந்து விடப்படுகிறது.   இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சாய ஆலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, 49 சாயப்பட்டறைகள் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளன. மீதமுள்ள 77 சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி சீல் வைத்து வருகின்றனர். இங்குள்ள சாய ஆலைகள் காடையம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் சாக்கடை கால்வாய் மூலம் சாயநீரை திறந்து விடுகின்றனர். இந்த சாயநீர் சாக்கடை நீருடன் சென்று ஆற்றில் கலக்கிறது. மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் வருகிறது. இதனால், இப் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு காடையம்பட்டி, செங்காடு பகுதிக்கு இடையே 60 ஏக்கர் விவசாய நிலத்தில் சில ஏக்கர் இடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீரும் பாதிக்கும். மேலும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தில் இருந்து முக்கால் கிலோ மீட்டருக்குள் பவானி ஆறு உள்ளது. இதுதவிர, காடையம்பட்டி ஏரியும் 200 அடி தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நாங்கள் வீடுகளை காலி செய்து வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: